அறி : கட்டுரை அழைப்பு

அறிமுகம்

அறிவியல், தொழில்நுட்பம், பண்பாடு, மொழி, இசை, நிர்வாகம், வணிகம், சட்டம் போன்ற பல்துறைகளில் இருந்து தமிழ்க் கட்டுரைகளை உருவாக்கும், தொகுக்கும் தளமாக அமைவதே 'அறி' திட்டத்தின் நோக்கம்.

‘அறி’ கட்டுரைகள் அறிவுத் தேடலுக்கு விருந்தாகும் அறிவுசார் படைப்புகள். அறிந்தோரால் உரை ஆக்கப்பட்டு, தெளிந்தோரால் குறை நீக்கப்பட்டு இணையத்தில் தொகுப்பாகக் கிடைக்கும் அறிவுக் களஞ்சியமே ‘அறி’ கட்டுரைகள்.

‘அறி’ந்து கொள்ளும் திறனே அறிவுத் தேடலின் அடிப்படை. அத்திறனால் கிடைத்த அறிவினைக் கசடற நுகர்வோர், சிறுதெளிவு, பெருங்கலக்கம் போன்ற ஏற்றதாழ்வுகள் நீங்கிய சீரான சிந்தனையைப் பெறுவர். இதுவே வள்ளுவன் மொழியில் ‘மலர்தலும் கூம்பலும் இல்லது அறிவு’ எனப்படும்.

அழைப்பு

'அறி' கட்டுரைகள் படைக்க பல்துறை அறிஞர்களை அன்புடன் அழைக்கிறோம். உங்களுடைய ஆழமான நுட்பமான எண்ணங்களைப் பலருக்கும் புரியும் வகையில் எளிமையாகப் படைக்க உங்களை அழைக்கிறோம். நம் அறிவு நமக்கான மேசை விளக்காக மட்டும் இல்லாமல் பிறருக்கும் வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக இருக்கட்டும். கட்டுரைத் துறைகள், கட்டுரையாக்கும் நெறி, கட்டுரையின் அமைப்பு மற்றும் சீராய்வு குறித்த தகவல்களைக் கீழுள்ள பத்திகளில் காணலாம்.

கட்டுரைத் துறைகள்

கட்டுரை ஆசிரியர்கள் கீழ்காணும் துறைகளில் கட்டுரைகள் எழுத அழைக்கிறோம்.

  • 01 அறிவியல்
  • 02 தொழில்நுட்பம்
  • 03 மருத்துவம்
  • 04 வாழ்வியல்
  • 05 மொழி
  • 06 கலை
  • 07 நிர்வாகம்
  • 08 வணிகம்
  • 09 சட்டம்

கட்டுரை நெறி

கட்டுரையாசிரியர் தம் துறையிலோ அல்லது தாம் விரும்பும் வேறொரு துறையிலோ கட்டுரைக் கருவைத் தேர்ந்தெடுத்து தம் படைப்பை உருவாக்கலாம்.

கட்டுரை அளவு

1000 - 5000 சொற்கள்
2 - 25 பக்கங்கள்

எளிமை

அறி கட்டுரைகள் எளிமையாகப் பள்ளி, கல்லூரி மாணவர்களும், பொதுமக்களும் புரிந்து கொள்ளும் வகையில் அமைப்பது அடிப்படைத் தேவை.

கலைச் சொற்கள்

வேற்று மொழிச் சொற்களை இயன்றவரை தவிர்த்து தமிழில் இருக்கும் கலைச் சொற்களைப் பயன்படுத்த வேண்டும். கலைச்சொற்களை karky.in/chol அல்லது sorkuvai.in போன்ற தளங்களில் இருந்து பெறலாம். புரிதலுக்காக ஆங்கிலச் சொல்லை (அடைப்புக்குறிக்குள்) சேர்க்கலாம்.

பின்னணி இலக்கியம்

கட்டுரையின் தலைப்பு தொடர்பாக மையக் கருவின் தொடர்பாக வெளிவந்துள்ள பிற கட்டுரைகளைக் குறிப்பிட்டு அந்த இலக்கியங்களில் இருந்து இந்தக் கட்டுரை எவ்வாறு தொடர்புடையது எவ்வாறு வேறுபடுகிறது என்பதை மேற்கோள்களுடன் குறிப்பிட வேண்டும். மேற்கோள்கள் காட்டப்படும் கட்டுரைகள் பிற மொழிகளிலும் இருக்கலாம்.

காப்புரிமைக் கொள்கை

கட்டுரையில் உள்ளவை அனைத்தும் கட்டுரை ஆசிரியரின் சொந்த எழுத்தாக இருக்கவேண்டும். பிற கட்டுரைகளில் இருந்து மேற்கோள் காட்டப்படும் அனைத்துப் பகுதிகளும் முறைப்படி மேற்கோள் காட்டப்படவேண்டும். ஆசிரியர் பயன்படுத்தும் அட்டவணைகளும், வரைபடங்களும் அதே போல் ஆசிரியரால் உருவாக்கப்பட்டிருக்கவேண்டும் அல்லது மேற்கோள் காட்டப்பட்டிருக்கவேண்டும்.

கட்டுரையின் அமைப்பு

கட்டுரை கீழ்வரும் கட்டமைப்பில் இதே வரிசையில் அமைய வேண்டும்.

கட்டுரையின் தலைப்பு

ஒரு சில சொற்களில் கட்டுரையின் மையக் கருவைச் சொல்வது போல் தலைப்பு அமைய வேண்டும். 'யானை' என்பதுபோன்ற பொதுத்தலைப்புகள் இல்லாமல் 'கார்காலத்தில் யானைகளின் உணவுமுறை' என்பது போல் கட்டுரையின் நோக்கத்தைச் சொல்வதாக அமையவேண்டும்.

கட்டுரைச்சுருக்கம்

100 சொற்களுக்கு மிகாமல் கட்டுரையின் சுருக்கத்தை வழங்கவேண்டும். சிறு அறிமுகமும் கட்டுரையின் மையக் கருவும் கட்டுரையின் நோக்கமும் கட்டுரைச் சுருக்கத்தில் சுருக்கமாக இருக்கவேண்டும். பெரும்பாலுமான வாசிப்பாளர்கள் கட்டுரைச் சுருக்கத்தைப் படித்துப் பிடித்திருந்தால் மட்டுமே பிற பகுதிகளுக்குச் செல்வர். ஆகையால் ஒரு நல்ல கட்டுரைச் சுருக்கம் வாசிக்க வாசல் திறக்கும்.

குறிப்புச் சொற்கள்

இந்தக் கட்டுரையின் மையக் கருவைக் குறிக்கும் குறிப்புச் சொற்களை ( 3-5 சொற்கள்) வழங்க வேண்டும். இந்தக் கட்டுரையைத் தேடல் பொறியில் எந்தச் சொற்கள் கொண்டு தேடினால் கிடைக்கவேண்டுமோ அந்தச் சொற்களே குறிப்புச் சொற்கள். 'எந்திரனியல், செயற்கை நுண்ணறிவு, கணினி மொழியியல்' போன்றவை எந்திரனியல் குறித்த ஒரு கட்டுரைக்கு நல்ல குறிப்புச் சொற்கள். 'நாட்களில், அந்த, எந்திரங்கள்' போன்றவை நல்ல குறிப்புச் சொற்கள் அல்ல.

அறிமுகம்

கட்டுரையின் களத்தை இந்தப் பகுதியில் அறிமுகம் செய்ய வேண்டும். காலம் சூழல் தொடர்பாக அறிமுகம் இருக்கலாம். சான்றாக, 'உணவு முறையும் கொரோனா நோய்த்தடுப்பாற்றலும்' என்ற தலைப்புக்கு நோய்கள் குறித்தும் வெவ்வேறு நாடுகளின் உணவு முறைகள் குறித்தும் கொரோனா நோய் குறித்தும் அறிமுகம் இருக்க வேண்டும். இந்தப் பகுதியில் இந்தக் கட்டுரையின் மையக் கருவைக் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. கட்டுரையின் அமைப்பு பற்றி எந்தப் பகுதிகளில் இந்தக் கட்டுரை எதைப் பற்றிப் பேசுகிறது என்று குறிப்பிட்டு இந்தப் பகுதியை நிறைவு செய்யலாம். [200 - 300 சொற்கள்]

பின்னணி இலக்கியம்

இந்தப் பகுதியில் கட்டுரையின் மையக் கருவிற்குத் தொடர்புடைய பிற நூல்கள், கட்டுரைகள் குறித்த ஆசிரியரின் பார்வை இடம் பெறவேண்டும். பிற கட்டுரைகளுக்கும் நூல்களுக்கும் இந்தக் கட்டுரையுடனான தொடர்பு மற்றும் வேறுபாடுகள் குறித்து இந்தப் பகுதி பேச வேண்டும். 'கைப்பேசிகளால் மாணவர்களுக்கு ஏற்படும் உளவியல் மாற்றங்கள்' என்பது தலைப்பு என்று கொள்வோமானால், கைப்பேசிகளின் மென்பொருள் வடிவமைப்பு குறித்தோ, மாணவர்களின் கைப்பேசி பயன்பாடு குறித்தோ, கையடக்கக் கருவிகளினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தோ இருக்கும் பிற இலக்கியங்கள் (வேற்று மொழியில் இருந்தாலும்) அவற்றைக் குறிப்பிட்டு மேற்கோளிட வேண்டும். ஒரு நல்ல பின்னணி இலக்கியம் கட்டுரை வாசிப்பாளரைப் பிற கட்டுரைகளுக்கும் ஆற்றுப்படுத்தும். [200 - 300 சொற்கள்]

நோக்கம் மற்றும் செயற்பரப்பு

இந்தப் பகுதியில் இந்தக் கட்டுரை படைப்பதற்கான நோக்கம் என்ன என்பதையும் இந்தக் கட்டுரையின் செயற்பரப்பு அல்லது எல்லைகளை வரையறுக்க வேண்டும். சான்றாக, 'அரசர்களின் காலங்களில் உலகெங்கும் இருந்த வரி வசூலிக்கும் முறைகளையும் தற்கால வரி வசூலிக்கும் முறைகளையும் ஆராயும் நோக்கத்தில் இந்தக் கட்டுரை படைக்கப்பட்டுள்ளது' என்பதைக் கட்டுரையின் நோக்கமாகவும், 'இன்று தென் இந்தியா என்று அழைக்கப்படும் பகுதிகளில் வாழ்ந்த அரசர்களின் வரி வசூலிக்கும் முறைகளைப் பற்றி மட்டும்தான் இந்தக் கட்டுரை ஆராய்கிறது. பிற நாடுகளில் உள்ள முறைகள் இந்தக் கட்டுரைக்குள் அடங்காது' என்பதைச் செயற்பரப்பாகவும் ஆசிரியர் அமைக்கலாம். [100 - 150 சொற்கள்]

விரித்துரை

இந்தப் பகுதியே கட்டுரையின் மையப் பகுதி. கட்டுரையின் கருவும் அது குறித்த ஆசிரியரின் பார்வையும் எண்ணங்களும் இந்தப் பகுதியில் சிறு சிறு பத்திகளாகத் தொகுக்கப்பட வேண்டும். கட்டுரைக்குத் தேவையான அட்டவணைகள், வரைபடங்கள் வரிசையில் 1, 2 என்று எண்ணிடப் பட வேண்டும். 'அட்டவணை 1 : மெய்யெழுத்துக்களின் பயன்பாட்டு அளவு' என்பது போலவோ 'வரைபடம் 3 : தமிழ் உயிர் எழுத்துக்களின் புள்ளியியல்' என்பது போலவோ அட்டவணைக்கோ வரைபடத்திற்கோ அடியில் குறிப்பிடப் படவேண்டும். விரித்துரைக்கு அடியில் இருக்கும் பத்திகளை ஆசிரியரின் விருப்பத்திற்கு இணங்க சிறு தலைப்புகளாகத் தொகுக்கலாம்.

முடிவுரை

இந்த நிறைவுப் பகுதியில் கட்டுரையின் கருப்பொருளையும் இந்தக் கட்டுரையின் நோக்கம் நிறைவேறியதா என்பதையும் எதிர்காலத்தில் இந்தக் கட்டுரையின் எண்ணங்களின் நீட்சி எப்படி இருக்கலாம் என்பது குறித்தும் ஆசிரியர் கூறலாம்.

புள்ளிவிவரங்கள் விளக்கப்படங்கள்

ஆய்வுக் கட்டுரைகளில் உள்ளிடும் படங்கள், பொதுவானதாக இட்டு நிரப்பாமல், ஆய்வு சார்ந்த தொழின்முறைப் படங்கள் மட்டுமே இருத்தல் நலம். விளக்கப்படங்கள் ஆசிரியரால் உருவாக்கப்பட்டதாக இருத்தல் சிறப்பு. பிற இடங்களிலிருந்து எடுக்கப்படும் படங்கள் முறையாக மேற்கோள் இடப்படவேண்டும். அட்டவணை (Tabulation) & புள்ளியியல் தரவுகள் (Statistical Data) அமைவது, ஆய்வுக் கட்டுரையின் தரத்தை இன்னும் மேம்படுத்த உதவும்.

மேற்கோள்

கட்டுரையின் வெவ்வேறு பகுதிகளில் மேற்கோள் காட்டப்பட்ட கட்டுரைகள் நூலின் விவரங்களை இந்தப் பகுதியில் வரிசையாகப் பட்டியலிட வேண்டும். சான்றாக, பின்னணி இலக்கியப் பகுதியில் 'ஒளி வளையும் தன்மையை ஒரு கோணத்தில் மட்டும் ஆராயக்கூடாது என்று ஜார்ஜ் மற்றும் குழுவின் கட்டுரை [2] குறிப்பிடுகிறது.' என்ற தொடர் இடம்பெற்றால் [2] என்பதற்கான மேற்கோள் விளக்கம் மேற்கோள் பகுதியில் [2] ஜார்ஜ் மற்றும் குழு, ஒளியின் வளையும் தன்மை, 13ஆம் பன்னாட்டு கருத்தரங்கம், மாநாட்டு மலர், நியுயார்க், 2015 - பக்கம் 163
இதுபோன்று மேற்கோள் பகுதியில் குறிப்பிடப் பட வேண்டும். நூல்களுக்கும், இணைய பக்கங்களுக்கும், பிற கட்டுரைகளுக்கும் கீழுள்ள முறையில் மேற்கோள்கள் வழங்கப்பட வேண்டும். கட்டுரையில் எந்த வரிசையில் மேற்கோள்கள் கொடுக்கப்படுகின்றனவோ அதே வரிசையில் மேற்கோள்கள் பகுதியிலும் எண்களிடப்பட வேண்டும்.

நூல்களுக்கு

[1] ராபர்ட் ஃப்லௌண்டிங், ஐஸ் பெர்க்ஸ், ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழகம் வெளியீடு, 1967 - பக்கம் 21

கட்டுரைகளுக்கு

[2] ஜார்ஜ் மற்றும் குழு, ஒளியின் வளையும் தன்மை, 13ஆம் பன்னாட்டு கருத்தரங்கம், மாநாட்டு மலர், நியுயார்க், 2015 - பக்கம் 163

இணைய பக்கங்கள் மற்றும் காணொளிகளுக்கு

[3] அதியன் சுந்தரம், 'தமிழும் ஜப்பானிய மொழியும்', http://langwebquote.org/tamjap20001.html , 2001, அண்மையில் கண்ட நாள் 21/02/2021

ஆசிரியர் குறிப்பு

ஒரு கட்டுரையைப் பல ஆசிரியர்கள் இணைந்து எழுதலாம். ஆசிரியர்களின் பெயர்கள், கல்வித் தகுதி, தொடர்புடைய நிறுவனம், பணி, பிற படைப்புகள் போன்ற குறிப்புகள் மற்றும் வாசகர்கள் ஆசிரியரைத் தொடர்பு கொள்ளும் முறை(மின்னஞ்சல் அல்லது அஞ்சல் முகவரி) இந்தப் பகுதியில் இடம் பெறவேண்டும். ஆசிரியர்களின் கடவுச்சீட்டளவு(passport size) நிழற்படங்கள் இணைக்கப்பட வேண்டும்.

கட்டுரையாசிரியரின் பெயர், கல்வித் தகுதி, தொடர்புடைய நிறுவனம் (ஏதேனும் இருப்பின்), வேலை, பொழுதுபோக்கு போன்றவைப் படைப்பாளரை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்த உதவும்.

கட்டுரைச் சீராய்வு மற்றும் வெளியீடு

ஆசிரியர் ஒப்படைக்கும் கட்டுரைகளை எங்கள் சீராய்வாளர் குழு படித்து திருத்தங்கள் ஏதேனும் தேவைப்பட்டால் ஆசிரியருக்குத் தெரியப்படுத்துவோம். ஆசிரியர் சீராய்வாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க திருத்தங்களைச் செய்துதர வேண்டும்

ஆசிரியர் கட்டுரையைத் திருத்தங்களுடன் ஒப்படைத்த பின்னர் சீராய்வுக்குழுவின் மறு பார்வைக்குப் பிறகு வெளியீட்டுக்கு ஏற்கப்படும். ஆசிரியருக்கு மின்னஞ்சல் வாயிலாகக் கட்டுரை ஏற்பு அல்லது ஏற்க இயலாமை அறிவிக்கப்படும்.

ஆசிரியர் கட்டுரை ஒப்படைத்து இரண்டு மாத காலத்திற்குள் கட்டுரை குறித்த முடிவுகள் அறிவிக்கப்படும். ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்டுரைகளின் அமைப்பை வெளியீட்டுக்கு ஏற்றவாறு அமைக்கும் பணி அதன் பின்னர் நிகழும். ஏற்று வெளியிடப்படும் கட்டுரைகள் ஒவ்வொன்றும் ரூ.500 ஐ வெகுமதியாகப் பெறும்.

'அறி' வாயிலாக வெளியிடப்படும் அனைத்து கட்டுரைகளும் ஆசிரியரின் பெயரில் மட்டுமே வெளிவரும். இந்தக் கட்டுரைகளை அறியின் இணைய தளத்திலும் எதிர்காலத்தில் நூலாகவோ மின்-நூலாகவோ வெளியிடும் உரிமையை ஆசிரியர் எங்கள் நிறுவனத்திற்கு நல்க வேண்டும்.

இந்தக் கட்டுரை வேறு எந்தத் தளத்திலும் நூலிலும் இதற்கு முன் வெளியிடப்படவில்லை என்றும், இது ஆசிரியரின் சொந்தக் கருத்து எங்கிருந்தும் எடுத்தாளப்படவில்லை என்றும் ஆசிரியரால் வேறு எங்கும் இதன் பின்னரும் வெளியிடப்படாது என்றும் உறுதியளிக்கவும் அதே போல் அறி தளத்தில் வெளியிடும் உரிமை நல்கவும் 'பதிப்புரிமை நல்கல்' படிவத்தில் ஆசிரியர் கையொப்பமிட வேண்டும்.

தொடர்பு

ஒருங்கிணைப்பு

திருமதி. ஆனந்தி நாராயணசாமி
மின்னஞ்சல் ari@karky.in
தளம் www.karky.in/ari

×

Disclaimer

All proceeds from the course will go towards our language research and language literacy projects.